Menu

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பலப்பரீட்சை

இளைஞர் காங்., தேர்தலில், அவர்களது ஆதரவு வேட்பாளரை வெற்றி பெற செய்ய, முதல்வர் நாராயணசாமியும், காங்., மாநில தலைவர் நமச்சிவாயமும் தீவிர பலப்பரீட்சையில் இறங்கியுள்ளனர்.

 

தொகுதி வாரியாக ஓட்டு சேகரிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், காங்., கட்சியை பலப்படுத்த அகில இந்திய தலைவர் ராகுல் உத்தரவுபடி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில், புதுச்சேரியில் மாணவர் காங்., மற்றும் இளைஞர் காங்., கட்சிக்கு நிர்வாகிகள் நியமிக்க புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது. அதையடுத்து, முதற்கட்டமாக மாணவர் காங்., தேர்தல் நடத்தப்பட்டு, தலைவராக கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 20 பேர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

 

அடுத்தகட்டமாக, இளைஞர் காங்., தேர்தல் நாளை 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு, அகில இந்திய இளைஞர் காங்., நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக இருந்து தேர்தலை நடத்துகின்றனர்.

 

அதற்காக, அகில காங்., தலைமையில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி வந்துள்ளனர்.மொத்தம் 22 ஆயிரம் இளைஞர் காங்., உறுப்பினர்கள் ஓட்டளிக்க உள்ளனர். தேர்தல் முடிந்து 20ம் தேதி, ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தலைவர் பதவிக்கு, ரமேஷ், லட்சுமிகாந்தன், அசோக்ராஜ், ஜெய்னா, காளிமுத்து, ரகுபதி, வேல்முருகன், ஜெயதீபன், கார்த்திக் ஆகிய 9 பேரும், 11 பொதுசெயலாளர் பதவிகளுக்கு, அமைச்சர் கந்தசாமியின் மகன் விக்னேஷ், தனவேலு எம்.எல்.ஏ., வின் மகன் அசோக் ஷிண்டே ஆகியோர் உள்ளிட்ட 27 பேர் களமிறங்கியுள்ளனர்.

 

தேர்தலுக்கு ஒரு நாள் இடைவெளியே உள்ள நிலையில், ஓட்டு சேகரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் லட்சுமிகாந்தனுக்கு முதல்வர் நாராயணசாமியும், ரமேஷ் என்பவருக்கு மாநில தலைவர் நமச்சிவாயமும் ஆதரவு தெரிவித்து, நேரடியாக களமிறங்கியுள்ளதால், இளைஞர் காங்., தேர்தல் சூடுபிடித்துள்ளது.

 

மேலும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களும் அவர்களது ஆதரவு வேட்பாளருக்கு ஆதரவளிக்க, அந்தந்த தொகுதி நிர்வாகிகள் மூலம் காய் நகர்த்தி வருகின்றனர்.

 

தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களும், அமைச்சர் முதல் எம்.எல்.ஏ.,க்கள் வரையில் தினமும் சந்தித்து, ஆதரவு கேட்டு வருகின்றனர்.

 

பண பலத்தையும் காட்ட வேட்பாளர்கள் ரெடியாகி விட்டதால், பொதுத்தேர்தல் அளவிற்கு இளைஞர் காங்., தேர்தல் புதுச்சேரியில் சூடு பிடித்துள்ளது.

 

குறிப்பாக, இளைஞர் காங். தேர்தல் மூலம், தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில், நாராயணசாமியும், நமச்சிவாயமும் பலப்பரீட்சையில் இறங்கியுள்ளனர்.

 

இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை இளைஞர் காங்., தேர்தல் முடிவு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

 

Leave a Reply