Menu

இளைஞர் காங்கிரஸ் தேர்தல் தலைவர் பதவியில் நமச்சிவாயம் வெற்றி

இளைஞர் காங்., தேர்தலில் தலைவர் பதவி உள்ளிட்ட பெரும்பான்மை தொகுதிகளில், மாநில தலைவர் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளது, கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், காங்., கட்சியை பலப்படுத்த அகில இந்திய தலைவர் ராகுல் உத்தரவுபடி, தேர்தல் மூலம், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில், புதுச்சேரி மாணவர் காங்., மற்றும் இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக மாணவர் காங்., தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

அடுத்து, இளைஞர் காங்., தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டது. தலைவர், பொது செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடமிருந்து, ஜூலை 30ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கி, கடந்த 2ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டது.

 

தலைவர் பதவிக்கு ரமேஷ், லட்சுமிகாந்தன், அசோக்ராஜ், ஜெய்னா, காளிமுத்து, ரகுபதி, வேல்முருகன், ஜெயதீபன், கார்த்திக் ஆகிய 9 பேரும், 11 பொதுசெயலாளர் பதவிகளுக்கு, அமைச்சர் கந்தசாமியின் மகன் விக்னேஷ், தனவேலு எம்.எல்.ஏ.,வின் மகன் அசோக் ஷிண்டே உள்ளிட்ட 28 பேர் போட்டி யிட்டனர்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட லட்சுமிகாந்தனுக்கு முதல் வர் நாராயணசாமியும், ரமேஷ்க்கு மாநில தலைவர் நமச்சிவாயமும் ஆதரவு தெரிவித்து, நேரடியாக களமிறங்கினர்.

 

இளைஞர் காங். தேர்தல் மூலம், பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில், நாராயணசாமியும், நமச்சிவாயமும் பலப்பரீட்சையில் இறங்கினர். மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு, 18 மற்றும் 19 தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.

 

அகில இந்திய இளைஞர் காங்., நிர்வாகிகள் பிங்க், நிதிஷ், நரசிம்ம ரெட்டி ஆகியோர் பொறுப்பாளர்களாக இருந்து தேர்தலை நடத்தினர். மொத்தமுள்ள 22 ஆயிரத்து 2 ஓட்டுகளில், 14 ஆயிரத்து 73 ஓட்டுகள் பதிவானது.

 

கம்பன் கலையரங்கில் நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. காலை 11:00 மணிமுதல் வேட்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 12:00 மணிக்கு தொகுதி வாரியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன.

 

பகல் 2:00 மணியளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நமச்சிவாயம் ஆதரவாளராக ரமேஷ், நாராயணசாமி ஆதரவு வேட்பாளர் லட்சுமிகாந்தனை விட, 2,642 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

 

அதுபோல் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அமைச்சர் கந்தசாமியின் மகன் விக்னேஷ், எம்.எல்.ஏ., தனவேலு வின் மகன் அசோக் ஷிண்டே ஆகியோர் வெற்றி பெற்றனர்.

 

வெற்றி பெற்றவர்களின் ஆதரவாளர்கள் கம்பன் கலையரங்கு வாசலில் பட்டாசு வெடித்து, வெற்றியை கொண்டாடினர்.

 

இளைஞர் காங்., தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது, இரு அணியாக இளைஞர் காங்கிரசார் திரண்டதால், எஸ்.பி., க்கள் மாறன், ரங்கநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

Leave a Reply